Description
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பதற்கு முன்பாகவே அவர் பிரதமர் ஆக வேண்டும் என்ற தீர்மானத்துடன் எழுதப்பட்ட நூல் இது. இந்த நூலை நான் எழுதி மூன்று ஆண்டுகள் நிறைவு பெறப் போகின்றன இதன் அச்சு பதிப்பு வெளியிட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன.
முந்தைய முன்னுரைகளில் குறிப்பிட்டதை போல இது நான் விதைக்கும் ஒரு கனவு.2018 ஆம் ஆண்டு என் மனதில் விழுந்த இந்த விதை 2020- 21 ல் ஒரு புத்தகமாக உருப்பெற்றது. இதன் ஆங்கில பதிப்பு நாடு முழுவதும் பரவலான வரவேற்பை பெற்ற அதே வேளையில் அதிகமாக விமர்சிக்கவும் பட்டது.
ஹிந்தி, மராட்டி,பெங்காலி, தெலுங்கு, கன்னடம்,மலையாளம் உள்பட தமிழிலும் இதை கொண்டு வர வேண்டும் என்று நான் எடுத்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றாலும் எல்லா நூல்களையும் பிழை திருத்தி புத்தகமாக்கி வெளியிடும் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டது.
இருப்பினும் இந்தி மொழிபெயர்ப்பு வேலைகள் மட்டும் நிறைவுற்று இந்தி நூல் கடந்த ஆண்டு ஜுலை மாதம் மின்னூலாக வெளியிடப்பட்டது. அதன் அச்சு நூலை தில்லியில் வெளியிடும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கடந்த வாரத்தில் தொடங்கப்பட்ட தமிழ் நூலின் வேலை முடிந்து இதோ தமிழ் பதிப்பு உங்கள் கைகளில்.
இந்த நூலில் எழுதியிருக்கும் தகவல்கள் அனைத்தும் அவர் முதலமைச்சராக ஆவதற்கு முன்பாகவே செய்த சாதனைகளை அவர் வாழ்ந்த வாழ்வை அவரது வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்டவையே.
அவர் முதலமைச்சர் ஆன பிறகு என்னென்ன சாதனைகள் செய்திருக்கிறார் என்பதைப் பற்றி ஒரு நூல் அல்ல ஒரு நூறு நூல்கள் எழுதலாம். மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் இந்த இரண்டரை ஆண்டுகளில் செய்த சாதனைகள் அனைத்தும் இந்த நூல் எழுதப்பட்டதற்கான நோக்கத்தையும் அது கேட்கும் கேள்வியையும் நியாயப்படுத்துவதாகவும் மீட்பதாகவும் இருக்கிறது என்பதில் எனக்கு எத்தனை பெருமையாக இருக்கிறது என்பதை நானே சொல்லத் தேவையில்லை.
அதை என் நண்பர்களே அடிக்கடி முதலமைச்சரின் அதிரடி திட்டங்கள்,சாதனைகள், நிர்வாகத் திறனைப் பற்றிக் குறிப்பிட்டு குறுந்தகவல்கள் அனுப்பி என்னோடு அவர்களும் தங்கள் பெருமையையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஆங்கில பதிப்பின் அச்சு நூல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
எந்த இடத்திலும் பெரிதாக விளம்பரப்படுத்தப்படாத நிலையில் இந்நூலை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி அசாம் முதல் மகாராஷ்டிரா வரை பல மாநிலங்களிலிருந்து ஆன் லைனில் வாங்கியிருக்கிறார்கள்.
இதில் பல உயர் அதிகாரிகளும் கல்லூரி பேராசிரியர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் அடக்கம். சமீபத்தில் ஒரு டிவி விவாதத்தில் கூட இந்த நூல் மேற்கோள் காட்டப்பட்டது.
புத்தகம் படித்தவர்களை விட புத்தகத்தின் தலைப்பை படித்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் பல கோடிகளை தாண்டும்.நமது நோக்கமும் அதுதான் என்பதை என்னுடைய மின்னூல் பதிப்பு முன்னுரையிலேயே சொல்லி இருந்தேன்.
இந்த நூலின் இந்தி பதிப்பின் வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது இதைப் பற்றி அறிந்த ஒரு வட மாநில பேராசிரியர் மிகவும் மகிழ்ந்து “நம் தலைவர்” ஸ்டாலின் ஒருவரால் மட்டுமே இந்த நாட்டில் சமூக முன்னேற்றத்தையும் பொருளாதாரம் முன்னேற்றத்தையும் ஒரே சமயத்தில் நிகழ்த்தக் கூடிய திறன் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது அவர் “நம் தலைவர்” என்று குறிப்பிட்டதாகும்.
இன்னும் சில வட மாநில அரசியல் தலைவர்கள் இந்த நூல் எப்போது இந்தியில் வெளி வருகிறது என்று ஆவலுடன் கேட்டறிந்தனர்.
தமிழ்நாட்டில் பரவலாக ஆங்கில நூல் வாசிப்பாளர்களிடையே சென்று சேர்ந்திருந்தாலும் தமிழில் ஏன் கொண்டு வரவில்லை என்று பல நண்பர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர்.
நியாயப்படி இந்த தமிழ் பதிப்பு முதலிலேயே வந்திருக்க வேண்டும்.தாமதமானதற்கு உண்மையில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.இத்துடன் முன்பே திட்டமிட்டபடி மற்ற மொழிகளிலும் நூல்கள் விரைந்து வெளியிடப்படும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
நெருங்கி வந்து கொண்டிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலின் போது இந்த நூல் பல மொழிகளில் வெளிவருவது ஒரு பெரிய விழிப்புணர்வை எல்லா தரப்பு மக்களிடமும் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
இந்நூல் முழுக்க முழுக்க வட மாநிலத்தவர்களும்,தமிழ்நாடு அல்லாத பிற மாநிலத்தவர்களும் படிக்கும் வண்ணம் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல். அதாவது மு. க.ஸ்டாலின் யார் என்றே தெரியாதவர்களும் படித்து புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்ட நூல். இதை தமிழாக்கம் செய்யும் போது அந்த பாதிப்பு இருப்பதை தவிர்க்க முடியவில்லை. ஆங்கிலத்தில் மற்றும் ஹிந்தி நூல்களில் அத்தியாயங்களில் வரிசை சற்றே வேறானவை. அதை மட்டும் தமிழ் நாட்டுக்கு தகுந்த விதமாக மாற்றியிருக்கிறோம்.
இந்தியாவின் கூட்டு மனசாட்சி நினைவில் நிறுத்த வேண்டிய தெற்கின் சித்தாந்தத்தை,திறனை,தேவையை,அவசியத்தை உரத்த குரலில் நினைவூட்ட இந்த நூல் பயன்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
நூல் குறித்த உங்கள் கருத்துகளை writerkathirrs@gmail.com என்ற மின்னஞ்சலில் அவசியம் எனக்கு எழுதுங்கள்.
அன்புடன்
கதிர் ஆர் எஸ்
10-01-24
Reviews
There are no reviews yet.