கிருஸ்து எனும் பகுத்தறிவாளர்

கதிர் ஆர் எஸ்


”உங்களில் யார் உத்தமரோ அவர் முதலில் கல்லெறியுங்கள்!”

இயேசுவின் இந்த வசனம் கிருத்துவர் அல்லாதவர்களாலும் போற்றப்படும் ஒரு வசனமாக இருந்து வருகிறது. யூத மத கட்டுப்பாடுகளின் படி கல்லாலடித்துக்கொள்ளும் தண்டனையை நிறைவேற்ற சந்திக்கு கொண்டுவரப்பட்ட ஒரு விலைமகளை காப்பாற்றவும், அதேநேரம் மதவாத மூடநம்பிக்கைகளையும் சட்ட திட்டங்களையும் உடைக்கவும் விடுக்கப்பட்ட சவாலை அத்தனை பெரிய மக்கள் கூட்டத்தின் முன்பாக தர்க்க ரீதியாக எதிர் கொண்டு மேற்காணும் வசனத்தைச்சொல்லி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த சமயோசித அறிவாளி இயேசு கிருத்து அவர்கள்.

ஒரு தவறு நடைபெறும் போது தவறிழைத்தவனைத்தவிர மற்ற அனைவரும் நீதிபதிகளாக மாறி அவனை உடனடியாக தண்டிக்க விரும்பும் சூழல் இன்றும் நிலவுகிறது. அதுவே அடிப்படை மனித இயல்பு.

ஆனால் கிருத்துதான் ஒரு மனிதன் தன் பார்வையை தனக்குள்ளும் செலுத்த வேண்டும் என்ற ரிவர்ஸ் சிந்தனையை தனது பகுத்தறிவின் மூலம் உலகிலேயே முதன் முதலாக தோற்றுவித்தார். ஆதலால் தான் அவரை ஒரு சீர்திருத்தவாதி என்று சொல்லத்தோன்றுகிறது.

தான் பிறந்த யூத மதத்தின் மடைமைகளை எதிர்த்து குரல் கொடுத்து தன்பால் ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை சேர்த்த இயேசு அந்த காலகட்டத்தில் தன்னை கடவுளின் மகன் என்று சொல்லிக்கொண்டதில் எந்த ஆச்சர்யமுமில்லை.

அடிப்படையில் இயேசு ஓர் அகிம்சை தீவிரவாதி. அவரது போதனைகள் அகிம்சையின் உச்சம். அவர் போதித்த கருத்துக்கள் ஆயிரம் விழுக்காடுகள் மனிதாபிமானத்தையே வலியுறுத்துகின்றன. சக மனிதனை நேசிப்பதைப்பற்றி தனது அனைத்து போதனைகளிலும் பேசுகிறார். இப்படிப்பட்ட சிந்தனைகள் 2000 ஆண்டுகளுக்கு முன் ஒருவரால் சொல்லப்பட்டது உலகிற்சிறந்த அதிசயமாகும்.

அவர் போதனைகளில் சிலவற்றை கீழே தந்திருக்கிறேன் கூடவே அவை சொல்லும் கருத்தை ஒரு சொல்லில் குவிக்கவும் முயன்றிருக்கிறேன்.

சகிப்புத்தன்மை:

1.தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு!

உதவும் குணம்:

2.உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுக் கொடு

பெருந்தன்மை:

3.ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ

ஈகை குணம்:

4.உன்னிடத்தில் கேட்கிறவனுக்கு கொடு. உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே

அருள்/கருணை:

5.உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள். உங்களை சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படி செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்.

அடக்கம்:

6.ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது.

ஆறுதல்:

7.துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள்

ஊக்கம்:

8.சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.

நேர்மை:

9.நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்.

அன்பு:

10.இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள்

தூய்மை:

11.இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்

தலைமை:

12.சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்

கடமை:

13.நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது.

இந்த போதனைகளில் நிரம்ப காணப்பெறுவது வெறும் மனிதம்!மனிதாபிமானம் சார்ந்த பண்பட்ட வாழ்க்கை முறை. பரலோகம் என்பதை அவர் பலனாக குறிப்பிட்டாலும் அச்சொல் இல்லாமலும் இக்கருத்துக்கள் வலிமையானவை.

இயேசுவின் பிறப்பு இறப்பு உயிர்த்தெழுதல் போன்ற மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இயேசு என்ற மனிதர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் செய்தது மாபெரும் சமூகப்புரட்சியாகும்.
அக்காலகட்டத்தில் பாவங்களின் தன்மையை உணராமலேயே பாவங்களையும் தவறுகளையும் சகமனிதன் மீது வெறுப்புணர்வையும் கொண்டிருந்த மக்கள் மனத்தில் கருணையை அன்பை நேசத்தை விதைத்தவர் இயேசு.

ஏழைகளை, புறக்கணிக்கப்பட்டவர்களை, கைவிடப்பட்டவர்களை, நோயாளிகளை நாடிச்சென்று உதவியவர். இதில் நாடிச்சென்று என்ற சொல் முக்கியமானது. அவர் ஏற்படுத்திய அன்பின் அதிர்வு அதிகார வர்க்கத்தை மதப்பழமைவாதத்தை நடுநடுங்க வைத்தது. எங்கே மக்கள் தம்மை தூக்கி எறிந்து விடுவார்களோ இயேசுவால் தமது பிழைப்பு போய் விடுமோ என்று நாளுக்கு நாள் அதிகரித்த அச்சத்தில் அவரை ஒழித்தால் தான் தாம் பழைய படி ஆதிக்கம் செலுத்த முடியுமென எண்ணியே அவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தனர் (ஆனால் நடந்தது வேறு).

அவரை சிறைப்படுத்த தீட்டிய சதியில் இயேசுவின் சீடருக்கே கையூட்டு கொடுத்து காட்டிக்கொடுக்க வைத்தனர். மானுடத்தின் மேல் மனமெல்லாம் மாசற்ற பாசமும் அன்பு, நேசமும் கருணையும் கொண்டிருந்த அந்த மாமனிதரை துடிக்கத்துடிக்க சித்திரவதை செய்து சிலுவையில் அறைந்து கொல்லும் தங்கள் திட்டம் நிறைவேறியதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர் அக்கூட்டத்தினர். ஆனால் கால காலத்துக்கும் வெல்ல முடியாத கடவுளாக இயேசு மாறிவிட்டதை அவர்கள் வாழ் நாளிலேயே அவர்கள் கண்ட பின்னரே மாண்டார்கள்.
அத்தனை துன்பங்களை தாங்கிய போதும் இயேசுவின் மென்மையான அந்த மனம் தன்னை தண்டித்தவர்களையும் மன்னித்தது. இது ஓர் அசாத்திய மனநிலை என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இயேசு கடவுளின் மைந்தர் அதனால் இந்த வலி அவருக்கு பெரிதல்ல என்று கூட சிலர் கருதுவதுண்டு. ஆனால் அப்படிச் சிந்திப்பதே மிகவும் கொடூரமானது. அன்பை மட்டுமே உபதேசித்த ஒருவரை ரத்தம் சொட்டச்சொட்ட வன்கொடுமை செய்து கொல்லும் அந்த கொடூர நிலையில் ஒரு கணம் உங்களை கற்பனை செய்து பாருங்கள். இப்படிப்பட்டசிந்தனையின் வன்முறையே நம்மை பல நாட்கள் மன அழுத்தத்தில் தள்ளக்கூடும்.
2000 ஆண்டுகளுக்கு முன் உலக அளவில் குற்றங்களும் அதற்கான தண்டனைகளும் மிகக்கொடூரமாக இருந்திருக்கின்றன. நமது நாட்டில் கூட கழுவேற்றுதல் போன்ற மிகக்கொடூரமான தண்டனைகள் தரப்பட்ட வரலாறுகளை நாம் படித்திருக்கிறோம்.
இதை ஆளும் அரசும் மதவாதிகளும் முன்னிருந்து நடத்தியதுதான் இன்னும் கொடூரமானது. (இன்னும் சில தேசங்களில் மதவாதம் தலைவிரிதாடும் சூழலில் இத்தகு கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.)

தலையில் முள்கிரீடம், உடம்பெல்லாம் தசைகள் சிதைய கொடுக்கப்பட்ட கசையடி தோளில் தன்னை ஆணிகளால் அறைய செய்யப்பட்ட சுமக்க முடியாத பாரம் கொண்ட சிலுவை என மலையிலேற்றப்பட்ட இயேசுவின் மனநிலை எப்படி இருந்திருக்கும். அவர் சிலுவையில் அறையப்பட்டபோது எத்தனை வலியில் துடித்திருப்பார். நினைத்துப்பார்க்க முடிகிறதா நம்மால்?
அந்த நிலையிலும் இயேசு பேசியதாக ஏழு வாசகங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன:

1 ) பிதாவே இவர்களை மன்னியும்

இத்தனை நன்மைகளை செய்த போதும் இயேசு தண்டிக்கப்படுவதை எதிர்த்து அவரால் பலனடைந்த மக்கள் கிளர்ந்தெழவில்லை. அதிகார வர்க்கத்தையும் யூத மத குருக்களையும் எதிர்த்து ஒரு கேள்வி கேட்கவில்லை காரணம் அவர்களுக்கே தெரியாது. அதற்கு பைபிள் பல விளக்கங்களை சொல்கிறது. ஆனால் எதார்த்தம் என்னவென்றால் அத்தருணத்தில் மக்கள் போராட்ட மனநிலையில் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் இயேசுவையே அவர்கள் முழுவதுமாக ஏற்றுக்கொண்டவர்களாக புரிந்து கொண்டவர்களாக இல்லை. யூத குருமார்கள் செய்த மூளைச்சலவைக்கும் பலர் ஆட்பட்டிருந்தனர். சொந்தமாக சிந்திக்கும் ஆற்றலற்றவர்களாக இருந்தார்கள். இன்னும் சிலர் இயேசுவின் மேல் வெறுப்பைக் காட்டினர் அவரை தகாத சொற்களால் ஏசினர் என்றும் சொல்லப்படுகிறது. இது ஒரு மந்தை மனநிலை என்றே நினைக்கத்தோன்றுகிறது. ஆனால் அப்படிப்பட்ட மக்களுக்காக அவர் சொன்ன இந்த வாசகம் அவர் வரலாற்றை படிக்கும் எவருக்கும் கண்களைக் குளமாக்கக்கூடியதாகும்.

2 ) நீ இன்றைக்கு என்னோடு கூட பரதீசில் இருப்பாய்

தன்னோடு சிலுவையில் அறையப்பட்ட இரண்டு திருடர்களில் தனது குற்றங்களை உணர்ந்து மன்னிப்பு கேட்ட ஒரு திருடனுக்கு இயேசு அவர்கள் சொன்ன வசனமாக இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரம் மற்றொரு திருடன் இயேசுவை பரிகசித்தான் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

3 ) ஸ்த்ரீயே இதோ உன் மகன், சீஷனே இதோ உன் தாய்

உயிர் போகும் நிலையிலும் ஒரு மகனாக தனக்கு பிறகு தந்தையும் இல்லாத நிலையில் தனது தாய் எப்படி வாழப்போகிறார் என்ற கவலை அந்த மாமனிதருக்கு இருந்திருக்கிறது. தனக்கு விருப்பமான சீடன் யோவானிடம் தனது தாயை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

4 ) என் தேவனே என் தேவனே ஏன் என்னை கை விட்டீர்.

எப்பேர்பட்ட கல்நெஞ்சனையும் உலுக்கியெடுக்கக்கூடிய வாசகம் இது. உடலெங்கும் குருதி சொட்டும் புண்கள். கைகளும், கால்களும் ஆணிகளால் அறையப்பட்டதால் ஏற்படும் ரண வேதனை. உயிர் இன்னும் சில நிமிடங்களில் உயிர் போய்விடும் என்ற நிலையில் இயேசுவின் குரல் எத்தனையோ மக்களுக்கு நல்வழிகாட்ட நம்பிக்கையூட்டி வாழ்வில் ஒளி பாய்ச்சிய போதனைகளை வழங்கிய அந்த சிம்மக் குரல் இம்முறை கடவுளை நோக்கி ஒலிக்கிறது.
இயேசுவிற்கு இத்தகு தண்டனை வழங்கப்பட்டது கடவுளின் விருப்பம் என்றே வேதம் குறிப்பிட்டிருக்கிறது. மனிதர்களின் பாவங்களுக்காக அவர் பலி கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டிருக்கிறது. அதன் படி பார்த்தால் இது தேவ குமாரனான இயேசுவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.அப்படியிருந்தும் அவர் கடவுளை நோக்கி குரலை உயர்த்தி கேட்கிறார்.
என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்??

5 ) தாகமாய் இருக்கிறேன்

உயர்ந்து ஒலித்த அந்த குரலுக்கு பிறகான நீண்ட அமைதிக்கு பின் கொட்டிய குருதியால் உடலெங்கும் கொண்ட ரணங்களின் வேதனையில் ஏற்பட்ட வறட்சி! உடல் கடைசியாக திரவ குறைபாட்டை சரிசெய்யக்கேட்கும் அந்த கடைசி வாய்ப்பு.

6 ) எல்லாம் முடிந்தது

தான் கைவிடப்பட்டுவிட்டோம் அல்லது தன்னாலான பணியையெல்லாம் செய்து முடித்துவிட்டோம் என்ற திருப்தியிலோ அல்லது இனி இழக்க எதுவுமில்லை என்ற விரக்தியிலோ வெளிப்பட்ட வாசகமாகவே இதை பார்க்கத்தோன்றுகிறது.

7 )பிதாவே என்னுடைய ஆவியை உம்முடைய கைகளில் ஒப்புவிக்கிறேன்

இறுதி நிலை. இந்த வாசகத்துக்கு பின் இயேசு சிலுவையில் துடிதுடித்து இறக்காமல் தனது மூச்சை அடக்கி உயிர் விட்டதாக சொல்கிறது ஒரு குறிப்பு. பொதுவாகச் சிலுவையில் மரிப்பவர்கள் உயிர்போகும் நேரத்தில் மூச்சு விட முடியாமல் திணறி, தலையை நன்றாகத் தூக்கி, மூச்சு விட முயற்சிப்பார்களாம். மூச்சு விட முடியாமல், உயிர்போன பிறகு தலை தொங்குமாம். ஆனால் இயேசுவோ, தலையைச் சாய்த்து, பிறகு தம் ஆவியை ஒப்புக்கொடுத்தார் எனச்சொல்லப்படுகிறது.

இயேசுவின் வரலாற்றைப் மத ரீதியாக படிப்பதை விட மனிதாபிமானத்துடன் படிப்பதன் மூலம் அவர் எப்பேர்பட்ட பிறவி என்பதை உணரமுடியும். இறக்கும் தருவாயில் கூட தனது சிந்தனை கொள்கை பொறுப்பு ஆகியவற்றில் தெளிவாக இருந்திருக்கிறார்.

இயேசு சொன்னதாக சொல்லப்படும் இந்த ஏழு வசனங்களுக்கும் கிருத்துவ மறைகள் பலவிதமான விளக்கங்களை தந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை அவரின் கொடூர மரணம் மனித குலத்தின் பாவத்திற்கு பரிகாரமாய் இறைவனால் நிகழ்த்தப்பட்டது என்கிறது.

இயேசுவிற்கு நிகழ்ந்த இந்த மரணத்தைப்போன்ற கொடூர மரணம் மக்களால் கொண்டாடப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட உலகின் எந்த மேதைக்கும் போதகருக்கும் நிகழ்ந்திருக்க முடியாது.

அப்படி நிகழ்ந்த அந்த மரணம் இயேசுவின் சீடர்களை அதை நேரில் கண்ட மக்களை பல நாட்களுக்கு நிம்மதியாய் தூங்கவிட்டிருக்காது.

இயேசு உயிர்த்தெழுந்தது இவ்வாறாகவே இருக்கும். அவர் ஒவ்வொருவர் மனதிலும் உயிர்த்தெழுந்திருக்கவேண்டும்.

சொரூபியாகவோ அரூபியாகவோ அவர் உயிர்த்தெழுந்தது உண்மைதான். அதன் பயனாகவே இன்று உலகம் அவர் காட்டிய வழி நடக்கிறது.அவர் போதனைகள் 2000 ஆண்டுகளுக்கு பிறகும் உயிர்ப்புடன் இருக்கின்றன. உலகின் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் மதமாக கிருத்துவம் இருக்கிறது.

உலகின் ஒப்பற்ற சிந்தனையாளர், பகுத்தறிவாளர், அறிவாளி, ஞானி, போதகர், மாபெரும் மனிதர் கடவுளாகவே வணங்கப்படுவது தர்க்க முரணாக இருந்தாலும் தவறில்லை.

ஆனால் இயேசு கடவுள் என்பதை விட மனிதர் என்பதாலேயே அவர் கடவுளைவிடவும் அதிகம் மதிக்கப்படவேண்டியவர் துதிக்கப்படவேண்டியவர் என்பது என் தாழ்மையான கருத்து.

இன்று இயேசு உயிர்தெழுந்த நாள்!

அன்பும் அஹிம்சையும் கருணையும் மனிதமும் பெருகட்டும்!

-Kathir RS
1/4/18

News7 ல் வெளிவந்த என் கட்டுரை. கொடுக்கப்பட்ட லிங்க் தற்போது வேலை செய்யவில்லை.

0
Spread the love
wpChatIcon