சத்துணவு: சில நினைவுகள்(1984-1991)

சத்துணவு || கதிர் ஆர் எஸ்

“நாழியாச்சு..தட்டெடுத்து கிட்டு பள்ளியொடத்துக்கு ஓடு..”

சனி ஞாயிறுகளில் கூட வீட்டில்  பிள்ளைகளுக்கு மதிய உணவு கொடுக்க இயலாத தாய்மார்கள்..அரசு அளித்து வந்த உணவையாவது தன் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும் என பகல் 12 மணி வாக்கில் ஒரு பையில் அலுமினிய/ஈய/எவர் சில்வர் தட்டை போட்டு கொடுத்து எங்கே சாப்பாடு முடிந்து விடக் கூடாதே என்ற கவலையில் அவர்களை அவசர அவசரமாக பள்ளிக் கூடத்திற்கு துரத்திய காலம் ஒன்று இருந்தது.

இன்றும் அப்படியான நிலை இருக்கலாம்..

நகரங்களுக்கு இடம் பெயர்ந்த பின் அவை தென்படாமல் இருக்கலாம்…அவ்வளவே.

ஆனால் மேற்சொன்ன காலகட்டத்தின் நேரடி சாட்சி நான்.

அன்றைக்கு எங்கள் ஊரில் படித்த அத்தனை பிள்ளைகளும் வேறுபாடு இன்றி சனி ஞாயிறு நாட்களில் கூட சத்துணவு மட்டும் உண்பதற்காக 

பள்ளிக்கூடம் வந்து விடுவார்கள்.

என் குடும்ப பின்புலம் ஏழ்மையானதில்லை என்றாலும்..என் நண்பர்கள் எல்லோரும் சத்துணவுக்காக விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் சென்றதால் அவர்களுடன் நானும் செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். வெறும் சாப்பாடு மட்டுமல்ல..விடுமுறை என்பதால் காலை 10 – 11 மணிக்கு பள்ளிக்கூடம் சென்றால் சாப்பாடு போடும் வரை அங்கு விளையாடிவிட்டு..சாப்பிட்டபின்..பக்கத்திலிருந்த நாவத்தோப்புக்குள் சென்று மரத்திலேறி பழம் பறித்து தின்று விட்டு அங்கேயே மாலை வரை விளையாடி விட்டு வீடு திரும்புவோம்.கிட்டத்தட்ட ஒரு ஃபுல்டே ஃபன் என்பதால் விடுமுறை நாள் சத்துணவை நான் தவற விட்டதே இல்லை.

இத்தனைக்கும் எங்கள் பள்ளி ஓர் அரசு உதவி பெறும் தனியார் கிருத்துவ பள்ளி.

கலைஞர் வந்து அந்த உணவில் முட்டை போட்டதும் அந்த முட்டையை வாங்க மாணவர் கூட்டம் அடித்துக் கொள்ளும் நிலையும் அன்று இருந்தது.

அந்த சத்துணவு,முட்டை இவற்றை ஏற்பாடு செய்வதற்கு ஒரு சத்துணவு அமைப்பாளர் இருந்தார். சமையல் செய்ய அம்மாவும. பெண்ணுமாக ஒரு குடும்பமே இருந்தார்கள்.

அவர்களை நாங்கள் அக்கா என்று அழைப்போம்…

சத்துணவு அமைப்பாளரை.. “சத்துணவு சார்” என்று அழைப்போம்.

மற்ற நாட்களில் பள்ளிக்கூடம்..தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் இருந்தாலும்..சனி ஞாயிறுகளில் பள்ளிக் கூடம் சத்துணவு அமைப்பாளர் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அனைவருக்கும் உணவு கிடைப்பதை அவர் உறுதி செய்வதோடு சாப்பாடு முடிந்ததும் பள்ளிக்கூடத்தை இழுத்து பூட்டிச் செல்வது அவரது முக்கிய பணி.

ஒரு முறை அனைவரையும் அமரவைத்து சாப்பாடு போட்டபின்..பசங்களா…யாராவது எழுந்து ஒரு குறள் சொல்லுங்கடா..என்று சொல்ல..சிறுவனான என்னிடம் ஒரு சீனியர் மாணவன்..நான் சொல்றத அப்டியே சொல்லு எல்லாரும் கை தட்டுவாங்க என்று சொல்ல..நான் எழுந்து அவன் சொல்லிக் கொடுத்த குறளை சொன்னேன்..

“அகரமுதல எழுத்தெல்லாம்..

தகரப் பெட்டியில் எழுத வேண்டும்..”

மொத்த பள்ளிக்கூடமும் சிரிசிரியென சிரித்தனர்..எனக்கு அவமானமாகப் போனது..சத்துணவு அமைப்பாளரும் சிரித்து விட்டு..என்னிடம் வந்து..சரி சாப்பிடு..என்று சொல்லிவிட்டு சென்றார்.

சத்துணவு சமைக்க ஒரு தனி கொட்டகை உண்டு..அதில் ஒரு பெரிய அலுமினிய அண்டாவில்..(இன்றைய பிரியாணி அண்டா மாதிரி) அரிசியை போட்டு சமைப்பார்கள்..

ஒரு பெரிய கரண்டியை வைத்து கிண்டுவார்கள்.

சில சமயங்களில் சாம்பாரை ஊற்றி கிளறி சாம்பார் சாதமாக தருவார்கள்.ஆனால் பெரும்பாலும் தனி சோறு சம்பார் ஆகத்தான் இருக்கும். 

சோறு நல்ல பதத்தில் வடித்து அதில் நன்கு வெந்த பருப்பு சாம்பாரை நிறைய ஊற்றி பிசைந்து சாப்பிட்ட பின் மீதமிருக்கும் சாம்பாரை உறிஞ்சி குடிப்பது ஒரு தனி சுகம்.

சில பேர் அவசரத்தில் தட்டு எடுக்காமல் வந்து விடுவார்கள் ..அவர்களுடன் ஒரே தட்டில் ரெண்டு பேருக்கான சாப்பாட்டை வாங்கி வரப்பு வைத்து சாப்பிட்டு விட்டு..கடைசியில் சாம்பாரை உறிஞ்சி குடிக்க சண்டை போட்ட அனுபவம் எனக்கு உண்டு.அன்று என்னுடன் தன் உணவை பங்கு போட்டுக் கொண்ட அந்த மாணவன் பெயர் அருள் வனத்தையன்.

சத்துணவு அமைப்பாளருக்கும் சமைக்கும் பெண்களுக்கும் எப்போதும் ஏதாவது சண்டை நடந்து கொண்டே இருக்கும்..ஆனால்..ஒரு நாள் கூட அந்த அம்மா சமையலை நிறுத்தியதில்லை.சண்டை பாட்டுக்கு சண்டை வேலை பாட்டுக்கு வேலை.

ஒரு முறை நேரமாகிவிட்டதால்..நான் போவதற்குள் சாப்பாடு போட்டு முடித்து விட்டார்கள்..

அப்படிப்பட்ட சமயங்களில் பிள்ளைகள் பசியோடு ஏமாந்து விடக் கூடாது என மீதமிருக்கும் சாப்பாட்டை தருவார்கள்..

என் நண்பன் ஒருவன் இந்த தகவலைச் சொன்னதால்..நானும் சமயற்கட்டுக்கு சென்று பார்த்தேன்..அங்கு சாப்பாடு போட்டு முடித்த களைப்பில் அமர்ந்திருந்த சமையல்கார அம்மா..என்னப்பா என்ன வேணும் என்று கேட்க..நான் ஒன்னுமில்ல என்று சொன்னேன்..அவர் விடாமல் சாப்டியா? என்றார்..

நான் இல்ல..சாப்பிடல..இப்பதான் வந்தேன்..என்றேன்..உடனே ஒரு தட்டில் தனக்கு வைத்திருந்த சாப்பாட்டை போட்டு கொடுத்து சாப்பிடு என்று கொடுத்தார்.

பக்கத்தில் இருந்த அவரது பெண்..உன் சாப்பாட்டை எடுத்து கொடுக்குற நீ என்ன சாப்பிடுவே..என்று கேட்க.. என்ன பண்றது புள்ள சாப்பிடலன்னு சொல்றானே என்று சொன்னார்..

இல்லை எனக்கு வேண்டாம் நீங்க சாப்பிடுங்க என்று சொல்லும் அறிவு அன்று எனக்கு இல்லை..

மொத்த சமையலையும் முடித்து அனைவருக்கும் அவரே அவரவர் தட்டுகளில் ஆவி பறக்க உணவு போட்டு சாம்பாரை ஊற்றிக் கொடுப்பார்.

பிள்ளைகள் அண்டாவை சுற்றி நின்று கொண்டு…”க்கா க்கா க்கா” என்று தட்டை நீட்டியபடி நிற்போம்…வரிசையில் வருவது ஒவ் வொருவராக வாங்கிச் செல்வது போன்ற பழக்க வழக்கங்களை அன்னைக்கு கற்றுக் கொடுக்க யாருமில்லை.

சில சமயங்களில் நாங்கள் போடும் கூச்சலின் டார்ச்சர் தாங்காமல் அந்த அம்மா கரண்டியை அண்டாவில் ‘டொய்ங்’ என வேகமாக போட்டுவிட்டு எல்லோரையும் ஒரு கோபப்பார்வை பார்ப்பார். கூச்சல் அடங்கி அனைவரும் சைலன்டாகி விடுவர்.பிறகு கையில் கரண்டியை எடுப்பார்..மீண்டும் கூச்சல் தொடங்கிவிடும்.

இது தினமும் நடக்கும் கூத்து..நான் அந்த பள்ளியில் படித்த 8 ஆண்டுகளும் இதை தினமும் பார்த்திருக்கிறேன்.8 ஆண்டுகளும் அந்த அம்மாவும் சரி சத்துணவு சாரும் சரி அசராமல் எல்லா பிள்ளைகளுக்கு உணவு கிடைத்தததா என்று கருத்து சிரத்தையான கவனத்துடன் தங்கள் வேலையை ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் செய்து கொண்டே இருந்தனர்.

அவர்களுக்கு அதன் மூலம் ஒரு வாழ்க்கை வருமானம் இவையெல்லாமும் இருந்தன என்பது உண்மைதான்..ஆனால் அதைத் தாண்டி அவர்களுக்கு இருந்த சிந்தனையும் நேர்மையும் அர்ப்பணிப்பும்..திராவிட அரசியலால் உருவானது.அது அவர்களது உணர்விலும் ரத்தத்திலும் இருந்தது.

பிற்காலத்தில் அல்லது சம காலத்தில் சத்துணவு குறித்து புகார்களும் குற்றம் குறைகளும் கூட இருந்தன என்பது உண்மைதான்..நான் மறுக்கவில்லை..

ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும்..சத்துணவுதான் எங்களை வளர்த்தது.அன்று உண்ட முட்டைதான் எங்களை ஆரோக்கியமாக வைத்திருந்தது.

முக்கியமாக எங்களை பள்ளிக் கூடத்தோடு இறுக்கி பிணைத்து வைத்திருந்தது.பள்ளிக்கூடத்திற்கு தவறாமல் வருகை புரிய வைத்தது.அதன் மூலம் படிக்கவும்..வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்லவும் ஒரு வினையூக்கியாக செயல் பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கதிர் ஆர் எஸ்

25/08/23

காமேஸ்வரம் தூய செபஸ்தியார் நடுநிலைப் பள்ளி (இப்போது மேல்நிலை)யின் முன்னாள் மாணவன் 1984 -1991

செய்தி:

இன்று முதல் 31,000 அரசு பள்ளிக் கூடங்களில் படிக்கும் 17 லட்சம் மாணாக்கர்களுக்கு காலை சிற்றூண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியது!

0
Spread the love
wpChatIcon