கல்வி யோகம் என்னென்ன படிப்பு படிக்கலாம்?

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

கல்வி என்பது ஓர் அழியாச் செல்வம், கல்வியை பற்றி ஆன்றோர்கள், சான்றோர்கள், அறிஞர்  பெருமக்கள் பல வகையாக சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

ஒருமைக்கண் தான் கற்ற  கல்வி  ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு  உடைத்து.

கேடு இல்  விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை.

என்று திருவள்ளுவர் கல்வியின் உயர்வை பற்றி குறிப்பிடுகிறார். இதன்பொருள் என்னவென்றால் ஒரு தலைமுறையில் ஒருவர் படிக்கும் படிப்பு அவருடைய ஏழு தலை முறைக்கும் பெருமை தரும். ஒருவருக்கு அழிவில்லாத உயர்ந்த செல்வம் கல்வியே, மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலையற்றவை. இத்தகைய சிறப்பு மிக்க கல்வி, ஒருகால கட்டத்தில் படித்து என்ன செய்யப் போகிறாய் ஏதாவது சிறிய வேலை கிடைக்கும் அதில் வரும் வருமானம் கைக்கும், வாய்க்கும்தான் சரியாக இருக்கும். ஆகையால் ஏதாவது கடை வைத்து வியாபாரம் செய் என்று அறிவுரை கூறுவார்கள்.

ஆனால் இன்று காலம் மாறிவிட்டது கல்வி என்பது மிக மிக அத்தியாவசியம் என்றாகி விட்டது. முன்பெல்லாம் கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். ஆனால் தற்போது கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் செழிப்பு என்றாகிவிட்டது.  அந்தளவிற்கு கல்வி  கற்பதன் மூலம் பெரும் பணம் சம்பாதிக்கும் நிலை உள்ளது.

கல்வி என்பது இப்பொழுது ஒரு பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது. கல்வி கற்றுத்தரும் கல்லூரிகள், நிறுவனங்கள் இப்போது புற்றீசல் போல் பெருகிவிட்டன.  ஒரு 25 வருடங்களுக்கு முன்பெல்லாம் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம், அதில் சேர்ந்து படிப்பதற்கு பெரிய அளவிலான எந்த முயற்சியும் இல்லாமல் படிப்பதற்கு இடம் கிடைக்கும். ஆனால் தற்போது எங்கு நோக்கினும் கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் என்று வளர்ந்து கொண்டே போனாலும் படிப்பதற்கு இடமும், கேட்கின்ற பாடப்பிரிவில் ஒதுக்கீடு கிடைப்பதும் மிகவும் கடினமாகிவிட்டது.

இன்றைய சூழ்நிலையில் கம்ப்யூட்டர் என்பது நம் வாழ்க்கையில் உயர்மூச்சு போன்றதாகிவிட்டது கம்ப்யூட்டர் பற்றி தெரியவில்லை என்றால் ஒன்றும் தெரியாதவன் என்று அர்த்தம் கொள்ளும் அளவிற்கு கம்ப்யூட்டர் படிப்பு அசுர வேகத்தோடு வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது கம்ப்யூட்டர் சம்பந்தமான படிப்பு படித்தால் ஆயிரக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற நிலைமாறி இப்போது லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்ற நிலை உள்ளது.இந்த கலியுகத்தில் காமதேனு போல் வாரிக் கொடுக்கக்கூடிய இந்த கல்வி யோகம் யாருக்கு எப்படி இருக்கும், சிலருக்கு கல்வி சரளமாக வரும்.

சிலருக்கு மந்தமாக இருக்கும், பாதியில் கல்வி தடைப்படும். சிலருக்கு தடைப்பட்ட கல்வி தொடரும், சில மாணவர்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை நன்றாக படித்து பல பதக்கங்கள் பெறுவார்கள். சில மாணவர்கள் உயர்நிலை படிப்பு வரை மந்தமாக இருப்பார்கள். அதன் பிறகு கல்லூரியிலும், தொழிற்கல்வியிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவார்கள். சிலர் படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது. விஞ்ஞானப் பாடப்பிரிவில் பெரிய படிப்பு படித்திருப்பார். ஆனால் அவர் ஏதாவது ஒரு வங்கியில் பணிபுரிவார். கணக்குப் பாடம் முக்கியமாக முடித்திருப்பார். ஆனால் ஏதாவது அரசுப்பணியில் எழுத்தர் வேலையில் இருப்பார்.

இன்றைய சூழ்நிலையில் கல்வி என்பது ஆலமரம் போல் வளர்ந்து பல விழுதுகளை விட்டுள்ளது. படிப்பு என்று எடுத்துக் கொண்டால், பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிப்பது, பட்டப் படிப்பில் எந்தப் பிரிவில் சேருவது, டிப்ளமோ என்ற துறையில் எதில் சேரலாம் கம்ப்யூட்டர் துறையில் என்ன படிக்கலாம் என்று பல கேள்விகள், பல ஆலோசனைகள் என்று இன்று பெருகிவிட்டது. 12 ம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம் என்பதை சொல்வதற்கு பல ஆலோசகர்கள் இருக்கிறார்கள் என்கின்ற அளவிற்கு இன்று கல்வி வளர்ச்சியடைந்துள்ளது.

கல்லூரி கல்வி என்று எடுத்துக்கொண்டால் முன்பு  P.U.C., B.A, BSc, B.Com அல்லது டிப்ளமோ, மேற்படிப்பு என்றால் MA, MSc, M.Phil போன்றவைகள் இருந்தன. ஆனால் தற்போது இத்தனை வகையான கல்விப் பாடங்கள் உள்ளது என்பதற்கு ஒரு புத்தகமே வெளியிட்டுள்ளார்கள். அந்தளவிற்கு கல்வி என்பது இன்றியமையாததாகிவிட்டது. தற்காலத்தில் 12க்கு பிறகு மிக அதிகமாக அனைவரும் சேருவது டாக்டர், இன்ஜீனியர், இன்ஜினியரிங்கில் பல பிரிவுகள் ஆடிட்டர், ஆசிரியர், I.A.S, I.P.S, I.F.S,  சட்டம், விவசாயம், கம்ப்யூட்டர், கிராபிக்ஸ் மற்றும் அதனுடைய பிரிவுகள்  M.C.A, மேலும் டெக்னாலஜி சம்பந்தமாக D.F.T வான இயல் சாஸ்திரம் (ASTRONOMY) மற்றும் பல வகையான டிப்ளமோக்கள் என 100க்கும் மேற்பட்ட படிப்புகள் இன்று உள்ளது, இனி ஜோதிட ரீதியாக ஜாதக அமைப்பின்படி என்ன படிக்கலாம் ? உங்களின் கல்வி யோகம் எப்படி என்பதைப் பார்ப்போம்.

ஜோதிடத்தில்  கல்வி  அமைப்பு

* புதன் வித்தியாகாரகன்  இந்த கிரகம் ஜாதகத்தில் ஏதாவது வகையில்  பலமாக  இருக்க வேண்டும்.

* இரண்டாம் இடம், இரண்டாம் அதிபதி, இரண்டாம் இடத்தில் உள்ள கிரகம் பலம் பெற வேண்டும்.

* நான்காம் இடம், உயர்நிலைக் கல்வி வரை இந்த இடம் பயன் தரும்.

* ஒன்பதாம் இடம், பட்டப்படிப்பு, பட்ட மேல்படிப்பு, பல உயர்ந்த அஸ்தஸ்து தகுதிகளை தரும் இடம்.

* 2,4,9 ,ஐ தவிர ஐந்தாம் இடம் என்ற அறிவு, சமயோசித புத்தி, பூர்வ புண்ணியத்தைக் குறிக்கும் இடம்.

* பத்தாம் இடம், நாம் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை மற்றும் தொழிலை தரக்கூடிய இடம்.

* மேற்சொன்ன இந்த இடங்களுக்கு எல்லாம் பலம் சேர்க்கும் மிக முக்கியமான ஸ்தானம், லக்னம், மற்றும் லக்னாதிபதி, ஏனென்றால் ஒரு ஜாதகரை இயக்குபவரே லக்னாதிபதிதான்.எந்த ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும்  அதில் 1,2,4,5,9,10 போன்ற ஸ்தானங்கள், ஸ்தானாதிபதிகள் பலம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு அடுத்ததாக புதன், வித்தைக்குக்காரகன். இந்த புதனின் அருள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இதனால்தான் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று  சொல்வார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் பொன்னவன் என்று சொல்லக்கூடிய குருவின் பலத்தைவிட ஜாதகத்தில் புதனின் பலம் இருக்க வேண்டும். ராகு, கேது, தரும் கல்வி அறிவு ஞானம் ஜெனன லக்கினம் எதுவாக இருந்தாலும், சாயா கிரகங்களாகிய ராகு – கேது ஆகியோர் மகர ராசி, அல்லது கடக ராசி, ஆகிய ராசி இல்லங்களில் இருந்தால் கல்வி அறிவு மிகவும் பிரகாசமாக இருக்கும், மேலும் அனுபவ அறிவும், விஷய ஞானமும் அபரிமிதமாகக் காணப்படும்.

இதற்கு சான்றாக ஒரு புராணக்கதை உண்டு. ஸ்ரீமன் நாராயணனை நோக்கி ராகு, கேது இருவரும் தவம் இருந்து அவரிடம் நவகிரக பரிபாலனம் பெற்றனர். வேதங்கள் பிரம்மனிடம் இருந்ததால் அவரை வழிபட்டனர். பிரம்மதேவன் மனமிரங்கி ரிக்வேதம், யஜுர் வேதம் சாம வேதம் ஆகிய மூன்று வேதங்களையும், கடக ராசியிலுள்ள திருப்பாற்கடலில் வைத்து அவ்வேதங்களைக் கற்றுணர்ந்து பாதுகாக்குமாறு கேதுவை பணித்தார். மேற்சொன்ன மகரராசி அல்லது கடக ராசியில் ராகு, கேது இருவரும் இருக்க பிறந்த ஜாதகர்கள் விஷய ஞானத்திலும், கல்வியிலும் பெரும் புலமை மிக்கவர்களாக திகழ்வார்கள்.

படிப்பும் கிரக அமைப்பும்

டாக்டராகும் யோகம் : இது மருத்துவ சம்பந்தமான படிப்பு, மருத்துவர்கள் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள். ஆகையால் நிச்சயமாக பூர்வ ஜென்ம பலனும், அதிர்ஷ்ட அமைப்புகளும் தேவை. ஜாதகத்தில் 2,9,10,11 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், குரு இருவரும் ஆகியோருடன் கேதுவிற்கு தொடர்பு இருந்தால் தான் மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற முடியும்.

டாக்டருக்கு அதன் பிறகு மருத்துவத்துறையில் உட்பிரிவுகள் B.Pharm, D. Pharm, M. Pharm, DMLT பிஸியோதெராபி, மெடிகல்ரெப், மருந்துக்கடை மருத்துவ  உபகரணங்கள் விற்பது, மருந்துக்கம்பெனி என்று மருத்துவத்திற்கு தொடர்புடைய எந்த துறையினாலும் மருத்துவக் கிரகமான கேது அருள்புரிய வேண்டும்.

கீழ்க்கண்ட அமைப்புக்களில் ஒரு ஐந்து அமைப்புக்கள் இருந்தால் மருத்துவத்துறையில் பிரகாசிக்கலாம்.

* எண் கணித அமைப்பில் பிறந்த தேதி அல்லது கூட்டு எண் 1,2,7,9 ஆகிய தேதி  பிரகாசமானவை.

* லக்னம், லக்னாதிபதி வர்கோத்மம் பெறுவது விசேஷமான பலன்கள் ஏற்படும்.

* லக்னத்திற்கு 4,9,10 போன்ற மருத்துவக் கிரகமான கேது இருக்க வேண்டும்.

* கடக ராசி 4,9,10 ஆம் இடமாக அமைந்து அதில் கேது இருப்பது முதல் தரமான யோகம்.

* கேதுவிற்கு சூரியன், சந்திரன், செவ்வாய் மூவரும் ஆகிய கிரகங்களின் தொடர்பு ஏற்பட வேண்டும்.

* லக்னத்தில் கேது, செவ்வாய், சந்திரன் மூவரும் ஆகியோர் இருப்பது அல்லது லக்னத்தை பார்ப்பது.

* இரண்டாம் இடத்தில் கேது, செவ்வாய், சந்திரன் ஆகியோர் இருப்பது அல்லது பார்ப்பது.

* லக்னாதிபதிக்கு கேந்திரத்தில் கேது, செவ்வாய், சந்திரன் ஆகியோர் இருப்பது.

* நான்காம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, பத்தாம் அதிபதி ஆகியோருடன் கேது சம்பந்தம் பெறுவது.

* அசுவினி, மகம், மூலம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறப்பது முதல் தரமான மருத்துவ யோகம்.

* லக்னத்திற்கு பத்தாம் அதிபதி நவாம்ச கட்டத்தில் சந்திரன், செவ்வாய், கேது சம்பந்தம் ஏற்பட வேண்டும். மேற்சொன்ன அமைப்புகள் பலமாக இருந்தால் குறைந்தது ஐந்து அமைப்புக்கள் டாக்டர் சம்பந்தமான படிப்பு அல்லது மருத்துவத் துறையில் ஜீவனம் அமையும்.

0
Spread the love
wpChatIcon